நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் ரெய்டு: சோனியா, ராகுலிடம் விசாரித்த நிலையில் திடீர் நடவடிக்கை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகம் உட்பட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தின் மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நடத்தி வந்தார். 2010ம் ஆண்டு இந்த பத்திரிகை நிறுத்தப்பட்ட நிலையில், இந்த நிறுவனம் தர வேண்டிய ரூ.90 கோடி கடனுக்காக, அதற்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உறுப்பினர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடு நடந்தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை தற்போது அது தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் ராகுல், சோனியாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், டெல்லி பகதூர் ஷா ஜபர் மார்க் பகுதியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உட்பட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சோனியா, ராகுலிடம் நடத்திய விசாரணையில் சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி, இந்த வழக்கில் மேலும் பல ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளது’’ என்றனர். இந்த வழக்கில் கொல்கத்தாவை சேர்ந்த சில போலி நிறுவனங்களுக்கும் தொடர்பிருப்பதால், அந்த இடங்களிலும் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.