மதுரை | பள்ளிகள் திறந்து 50 நாட்களாகியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுகள் கிடைக்கவில்லை

மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள் திறந்து 50 நாட்களாகியும் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இதுவரை நோட்டுகள் வழங்கப்படவில்லை. இருந்தபோதும் நோட்டுகள் இல்லாமலேயே இன்று முதல் இடைத்தேர்வை எழுதுகின்றனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகள் அரசுப்பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டிலிருந்தவாறே மாணவர்கள் கல்வி கற்றனர். மேலும் இல்லம் தேடிக்கல்வி மூலமும் மாணவர்கள் கல்வி கற்றனர். நடப்பாண்டில் மட்டுமே அரசுப்பள்ளிகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளன. நடப்பாண்டு ஜூன் 13-ம் தேதி முதல் அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்டு முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது.

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் உள்பட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பாடப்புத்தகங்கள் வழங்கியும் அதனை குறிப்பெடுக்கும் நோட்டுகள் இன்னும் பல பள்ளிகளுக்கு வழங்கப்படாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். ஆக.3ம்தேதி முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதல் இடைத்தேர்வு தொடங்குகிறது. ஏறக்குறைய பள்ளிகள் திறக்கப்பட்டு இரு மாதங்களை நெருங்கும் வேளையிலும் இன்னும் நோட்டுகள் வழங்கப்படவில்லை.

ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு 5 நோட்டுகளும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 8 நோட்டுகளும் இன்னும் வழங்கப்படவில்லை. அரசால் வழங்காததால் தனியார் அமைப்புகள் மூலம் இலவசமாக நோட்டுகளை பெற்றுத்தந்து சமாளித்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், மதுரை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்னும் நோட்டுகள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மேலூர், மதுரை கிழக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு நோட்டுகள் வரவில்லை. சேவை நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மூலம் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கியுள்ளோம். பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் வழங்கவில்லை. இதை வெளியில் சொல்ல தலைமை ஆசிரியர்கள் தயங்குகின்றனர், என்றார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்திலுள்ள 15 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கும் நோட்டுகள் வந்துவிட்டன. நோட்டுகளை பள்ளிகள் வாரியாக பிரித்து அனுப்பிவருகிறோம். இதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது, விரைவில் கிடைத்துவிடும், என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.