கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்று கொண்டனர். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, மேற்குவங்க அமைச்சர்களாக இருந்த சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோர் உயிரிழந்தனர். இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், கடந்த மாத இறுதியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, அவரது கட்சிப் பதவியை பறித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் டிஸ்மிஸ் செய்தார். தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது என்று கூறியிருந்தார். அதன்படி, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாபுல் சுப்ரியோ, சினேகசிஸ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர், தஜ்முல் ஹொசைன், சத்யஜித் பர்மன், பிர்பாஹா ஹன்ஸ்தா மற்றும் பிப்லாப் ராய் சவுத்ரி உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் ஆளுநர் இல. கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் புதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
