சமீபத்தில் லோக் சபாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ககோலி கோஷ் தஸ்திதார், விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார், எம்.பி. மஹுவா மொய்த்ரா. விலைவாசி உயர்வு குறித்து தஸ்திதார் கடுமையாக சாடிக் கொண்டிருந்தபோது, லாகவமாக தன்னுடைய Louis Vuitton பிராண்டு கைப்பையை கீழே மறைத்து வைத்தார், மஹுவா.
விலைவாசி உயர்வு குறித்து பேசியபோது, அவர் தனது 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பையை மறைத்ததற்கு, பலரும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ‘உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது’ என்ற கேள்விக்கு பதில் அளித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஹுவா மொய்த்ரா. அதில், மோடிஜியின் 10 லட்ச மதிப்புள்ள சூட்டின் ஏலத்தில் கிடைத்த வருமானத்தில் சிறு தொகையை எனக்கு அனுப்பினார். அந்தத் தொகையிலேயே இந்த ஹேண்ட் பேக் வாங்கினேன், மீதிப் பணத்தை வக்கீல் கட்டணத்திற்குச் செலுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
அதாவது, அமலாக்கத்துறை இயக்குநரின் சட்டவிரோத நீடிப்பை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக வழங்க வேண்டிய வக்கீல் கட்டணம் இருந்தது. மோடி அனுப்பிய தொகையிலேயே ஹேண்ட் பேக் மற்றும் வக்கீல் கட்டணத்தைச் செலுத்தியதாக, அவர் பதில் அளித்துள்ளார்.
‘இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு’ என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.