அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது செல்போன் நம்பருக்கு அடிக்கடி மெசேஜ் வந்திருக்கிறது. அந்த நம்பரைத் தொடர்பு கொண்டபோது அதில் பேசிய மர்ம நபர்கள், குறைந்த வட்டியில் லோன் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனை நம்பி லட்சுமி பல தவணைகளாக ரூ.2,13,700 பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி லோன் வாங்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்துகொண்ட லட்சுமி, இது குறித்து அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகார் அளித்தார்.
அவர் சைபர் க்ரைம் போலீஸாருக்கு புகாரை அனுப்பியிருக்கிறார். அதன் பெயரில் ஏ.டி.எஸ்.பி ரவிசேகரன் (இணையக் குற்றப்பிரிவு) வழிகாட்டுதலின் படி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் டெல்லியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான தனிப்படை போலீஸார் டெல்லி சென்று, அந்த மாநில போலீஸார் உதவியுடன் பண மோசடியில் ஈடுபட்ட ஆனந்தன், சதீஷ்குமார் ஆகியோரைக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லேப்டாப், 8 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ரூ.1,25,000 பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கிய போலீஸார், 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம் பேசினோம். “லட்சுமியின் செல்போன் நம்பருக்குத் தினந்தோறும் அடிக்கடி மெசேஜ் வந்திருக்கிறது. அவருக்கு எழுதப் படிக்காத தெரியாத நிலையில் பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணிடம் இது என்னவென்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண்மணியோ, `நீங்கள் லோனுக்கு ஏதும் அப்ளை பண்ணி இருக்கிறீர்களா?’ என்று கேட்க இல்லையே என்று சொல்லியிருக்கிறார் லட்சுமி.
`இதுல அஞ்சு லட்சம் லோன் கொடுக்க இருப்பதாக மெசேஜ் வந்திருக்கிறது’ என்று சொல்ல, அந்த நம்பருக்கு லட்சுமி போன் செய்து, `லோன் ஓகே ஆகியிருக்குன்னு சொல்லி மெசேஜ் வந்திருக்கே?’ என்று கேட்டிருக்கிறார். எதிர்முனையில் பேசிய நபர் தன்னை வங்கி அதிகாரி போல காட்டிக்கொண்டிருக்கிறார்.
ஒருகட்டத்தில், `லோன் கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்’ என்று கேட்க, அதற்கு அவரோ, `உங்களுக்கு சும்மா லோன் தந்துவிட முடியாது. அதிகாரிகளைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். உங்களோட பிரச்னைகளை என்னன்னு சொல்லுங்க. அப்புறம்தான் எங்க மேனேஜர் கிட்ட நான் பேசி உங்களுக்கு லோன் கன்ஃபார்ம் பண்ணித் தர முடியும்’ என்று மூளைச் சலவை செய்திருக்கிறார்.
லட்சுமியும் கல்யாணத்துக்கு வாங்கின கடன் இருக்கு. எனக்கு அவசரமாக மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார். அதையடுத்து அந்த நபர் கடனுக்கான ப்ராசஸிங் கட்டணமாக சிறுக சிறுக…. அந்தப் பெண்ணை ஏமாற்றி ரூ.2,13,700 லட்சத்தைப் பறித்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் லட்சுமி இப்படிப் பணத்தை இழந்துகொண்டிருப்பது அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவர… அவர்கள் லட்சுமி ஏமாற்றப்பட்டிருப்பதை அவருக்கு விளக்கிக் கூறியிருக்கிறார்கள்.
அதையடுத்துதான் லட்சுமி இது தொடர்பாக போலீஸில் புகாரளித்தார். மாவட்ட எஸ்.பி-யின் உத்தரவின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். சைபர் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்களை ட்ராக் செய்ததில் அவர்கள் டெல்லியிலிருந்தது தெரியவந்தது. அதையடுத்து டெல்லிக்கு விரைந்து அங்கு 5 நாள்கள் தங்கியிருந்து கொள்ளையர்களைக் கண்காணித்துக் கைதுசெய்து அரியலூர் அழைத்து வந்தோம். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தோம். தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள்தான் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்றார்.