நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி, பூவைத்தேடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், 68 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனம் ஒன்று வேண்டும் என்று கேட்டு, சில வாகனங்களைப் பரிசீலித்து, ஸ்பிளெண்டர் ப்ளஸ் டூவீலரைத் தேர்வு செய்திருக்கிறார். பின்னர் அதற்கு முன் வைப்பு தொகையாக ரூ.1,000 செலுத்தி, தொடர்புக்காக செல் நம்பரையும் கொடுத்துச் சென்றுள்ளார். மறுதினம் ஸ்பிளெண்டர் ப்ளஸ் வாகனத்தை வாங்கும் பாணியில் கையில் பணப்பைபோல ஒன்றை எடுத்து வந்துள்ளார். அதைக் கடையில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வாகனத்தை ‘டெஸ்ட் டிரைவ்’ செய்வதாகக் கூறி ஓட்டிச் சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர், அவர் கடையில் வைத்துச் சென்ற கைப்பையை சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது அதில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது போல பேப்பரைக் கட்டி வைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் , இருசக்கரத்துடன் மாயமான முதியவர்மீது வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் திருட்டு ஆசாமியை வலை வீசித் தேடி வந்தனர்.
இந்த நிலையில், பைக்கை திருடிச் சென்றவர் செல்போன் நம்பரை வைத்து டவர் லொகேஷன் மூலம் கண்டறிந்தபோது, அவர் காரைக்கால் பகுதியில் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் தரப்பினர் முதியவரைக் காரைக்காலில் தேடி அலைந்தனர். அப்போது திருடிய பைக்கின் வண்டி எண்ணை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி ஹாயாக வலம் வந்துக்கொண்டிருந்த முதியவர் வசமாக சிக்கிக் கொண்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பதும்… காரைக்காலில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காரைக்காலிலிருந்து அவரை மாலை மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வந்த கடை உரிமையாளர் தரப்பினர், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, “விசாரணையில் முதியவர் குமார் இது போல டூவீலர் திருட்டுகளையும், வேலை வாங்கித் தருவதாக மோசடி செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவர்மீது திருட்டு வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு டூவீலரைப் பறிகொடுத்த பலர் வந்து விசாரித்த வண்ணம் உள்ளனர். அவரைப் போலீஸ் கஷ்டடியில் எடுத்து விசாரித்தால் மேலும் சில உண்மைகள் வெளிவரலாம்” என்றனர்.
வடிவேல் பட பாணியில் இருசக்கர வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்வதாகக் கூறி திருடிய முதியவர் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.