விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா வைப்பாற்றுக் கரையில் அமைந்துள்ளது விஜயகரிசல்குளம். இந்த ஊரின் வடகரை உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின் மூலம் நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் எனப் பல தொல்லியல் ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழாய்வு நடத்தப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டது.
தொடர்ந்து, கடந்த மார்ச் 16ம் தேதி வெம்பக்கோட்டை தொல்லியல் களத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளைத் தமிழகத் தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ஆகியோர் தலைமைதாங்கித் தொடங்கி வைத்தனர். மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் வெம்பக்கோட்டை அகழாய்வில் தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி ஆகியவை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 14 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், ஒரு குழியில் 80 செ.மீ. ஆழத்தில் இன்று நடந்த தொல்லியல் அகழாய்வில் சங்ககாலத்தில் பயன்படுத்தபட்ட தங்கத்தினாலான காதணி கண்டறியப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அகழாய்வில் முதல்முறையாக தங்க அணிகலன் கண்டறியப்பட்டிருப்பது தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த அணிகலன் 1.1 செ.மீ. நீளமும், 0.6 செ.மீ. சுற்றளவும், 1 கிராம் எடைகொண்டதாகவும் உள்ளது.
இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தினாலான அணிகலன் குறித்து தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அகழாய்வுப் பணியில் கிடைக்கும் பல்வேறு அரிய பொருள்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்தப் பொருள்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருளாக இருக்கும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து பல கலைநயம் மிக்க பொருள்கள் கண்டறியப்படுவது இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் வெளிக்காட்டும் வகையில் உள்ளதெனப் பொதுமக்கள் கூறுகின்றனர்.