நடிகர் சூர்யா தயாரிப்பில், கார்த்தி, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் `விருமன்’. முத்தையா இயக்கியுள்ள படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தற்போது மதுரையில் நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள, படக்குழுவினர் பலரும் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளனர்.
விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ” `என்ன மாமா சவுக்கியமா?’ என்று மதுரைக்கு வணக்கத்தை கூறி பேசத் தொடங்கினார், “இப்படி தாடி, மீசை இல்லாமல் தான் `பருத்திவீரன்’ படப்பிடிப்புக்கு வந்தேன். இவனை எப்படி பருத்திவீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். அமீர் சார் என்னை உருவாக்கினார். கிராமத்துப் படங்கள் எவ்வளவு முக்கியமென்று எல்லோரும் கூறினார்கள். இங்கு அப்பா,அம்மா என்று பல உறவுகள் இருக்கிறார்கள். கிராமத்து படங்கள் அடுத்தடுத்து பண்ண வேண்டும் என்பது முத்தையா சாருடைய உந்துதல் தான். இந்த விருமன் படத்தில் அப்பா தான் முதல் வில்லன். அப்படி ஒரு அப்பா பிரகாஷ் ராஜ் சார் தான். அவரை எதிர்த்து நிற்பது ஒரு சுகம் தான்.
பாரதிராஜா அங்கிள் படங்களை இன்று வரை நட்சத்திரங்கள், நிலாவாக பார்த்து வருகிறோம். முத்தையாவிடம் முதல் மரியாதை பீட் செய்யும் விதத்தில் ஒரு படத்தை எடுப்போம் என்று கூறுவேன். படிப்பு வரவில்லை என்றால் தான் சினிமாவிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். டாக்டர் படித்துவிட்டு சினிமாவிற்கு வந்திருக்கிறார்,அதிதி. அண்ணனிடம் ஏன் இந்த படத்தை தயாரித்தீர்கள் என்று கேட்டேன், ஒரு வார்த்தையில் உன்மேல இருக்கிற நம்பிக்கைலதான் என்று கூறிவிட்டார். முத்தையா ஷீட் முடித்துவிட்டு ஜிம்மிற்கு செல்வார்.” என்று உரையை முடித்துக் கொண்டார்.