கார்த்தி, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருமன்’ படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தற்போது மதுரையில் நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள, படக்குழுவினர் பலரும் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த விழாவில் படத்தின் நாயகி அதிதி ஷங்கர் பேசும்போது, ”என்னுடைய ஆசை கனவு எல்லாமே ரசிகையாக இருந்து இங்கே வரவேண்டும் என்பதுதான். இதற்காக எனது குடும்பத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் படத்தின் நாயகி தேன்மொழியாகத் தேர்வு செய்ததற்கு எங்கள் இயக்குநர் முத்தையாவிற்கு நன்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காட்சிகளையும் சிறப்பாக நடித்துக் காண்பிப்பார். அது நம்மைக் கண் கலங்க வைக்கும். கார்த்தி சார் அவருடைய நடிப்பின் மூலமாக வியக்க வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் எனக்குப் பல வகையில் வழிகாட்டியாக இருந்துள்ளார்” என்றவர் அதன் பிறகு யுவன் ஷங்கர் ராஜாவுடன் மேடையில் பாடிவிட்டு விடைபெற்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, ”படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடுவேன். முத்தையா சார்கூட முதன்முதலாக இணைகிறேன். படம் அருமையாக இருக்கிறது. கார்த்தி, சூர்யா, நான் எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரிதான். பள்ளிப் படிப்பில் தொடங்கி இவ்வளவு தூரம்வரை என்பது மிகப்பெரிய பயணம். ஹிட்டடிக்க வேண்டுமென்று நான் வேலைகள் பார்க்கவில்லை. நல்ல பாடல்கள் பண்ண வேண்டும் என்றுதான் வேலை பார்த்துள்ளேன்.
பள்ளியில் ஹவுஸ் கேப்டன் கார்த்திதான். நான் ஷூ அணியாமல் செல்வேன். அவர் பெர்ஃபெக்ட்டாக பள்ளிக்கு வந்து ‘யுவன் அவுட்’ என்று கூறுவார். என்னை ஓடவைப்பார். அன்றைக்கு ஓடவைத்ததற்கு நீ இன்று ஆட வேண்டும் என்று பாடல்களைக் கொடுத்துள்ளேன்” என்று அரங்கத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
அதனை அடுத்து, ”டிரக் டீலர் என்று மக்கள் என்னைக் கூறுவது தெரியும். அதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இசையினால இவ்ளோ இணைந்திருக்கோம்ன்னு நினைக்கறப்ப மகிழ்ச்சியாக இருக்கு. மதுரைக்குப் போறீங்க… வேட்டி, சட்டைதான் போட வேண்டும் என்று என் மனைவி கூறினார். எனக்கு இப்போ எல்லா ஷூட்டுக்கும் காஸ்டியூம் டிசைனர் என் மனைவிதான்” என்று புன்னகையுடன் விடைபெற்றார் யுவன்.