தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி கதையம்சத்தைத் தேர்வு செய்து நடித்து வருபவர் கார்த்தி. `பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் இவரின் அடுத்த ரிலீஸ் `விருமன்’. கார்த்தி, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள `விருமன்’ படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
இதைத் தொடர்ந்து படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தற்போது மதுரையில் நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள, படக்குழுவினர் பலரும் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த விழாவில் பேசிய கருணாஸ் வணக்கத்துடன் தன் உரையினைத் தொடங்கினார்.
”இந்த நாளில் மிகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற எனது நண்பரும், உடன்பிறவா சகோதரருமான சூர்யாவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்குள் எவ்வளவு போராட்டங்கள் இருந்தன என்று என்னைப்போல் உடன் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். என்னுடைய முதல் படத்தின் கதாநாயகனே சூர்யாதான். சாகும் வரை எத்தனை நடிகர்களுடன் நடித்தாலும் என்னுடைய முதன்மையான ஹீரோ என்றைக்கும் அவர்தான்.
‘கொம்பன்’ திரைப்படத்தில் முத்தையா அவர்கள் எனக்குச் சிறிய கதாபாத்திரத்தினைக் கொடுத்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் அதனைத் தாண்டி ஓர் அற்புதமான கதாபாத்திரத்தினை எனக்குக் கொடுத்துள்ளார். இதில் இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி நாயகியாக நடித்துள்ளார். முதல் படம் நடிப்பது போன்ற எந்த பதற்றமும் இன்றி நடித்துள்ளார். ‘நந்தா’ திரைப்படத்தில் நான் நடித்த லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் போன்று சூரி இந்தத் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார்.
இன்றைக்கு மண் சார்ந்து படம் எடுக்கும் நிறைய இயக்குநர்கள் வருவதற்கு விதை போட்டது இயக்குநர் முத்தையாதான். அவர் போன்று படம் எடுப்பவர்கள் வெகு சிலர்தான். அவரிடம் நீங்கள் சிட்டி படம் எடுக்க வேண்டும் என்று சிலர் கூறினார்கள். நீங்கள் அப்படியான படங்களை எடுக்க வேண்டாம். அதை எடுப்பதற்குப் பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எதை எடுத்தாலும் சரியாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றாலும் இன்று உங்களைப் போன்று மக்களுடைய மொழி, மண் சார்ந்த உணர்வுகளை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதற்கு இயக்குநர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்தத் திரைப்படத்தில் கார்த்தி, பிரகாஷ் ராஜ் இடையேயான ஒரு காட்சி நாயகன் கார்த்திக்கு இந்த ஆண்டிற்கான தேசிய விருதைப் பெற்றுத் தரும். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தேசிய விருது பெறும் என்று முதல் நாள் படப்படிப்பிலேயே நான் கூறியிருந்தேன். அது இங்கேயும் நடக்கும்” என்று நன்றியுடன் விடைபெற்றார்.