விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், அச்சுதாபுரம் பகுதியில் ‘சீட்ஸ்’ தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஷிப்ட்டில் பணியாற்றி வந்த பெண்களில் 121 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே கடந்த ஜூன் 3-ம் தேதி இதே தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கம், வாந்தி எடுத்து பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தொழிற்சாலையில் இருந்து சில பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் மீண்டும் 121 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து முதல்வர் ஜெகன்மோன் உத்தரவின்படி தொழிற்துறை அமைச்சர் குடி வாடா அமர்நாத், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ‘‘பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும். இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். பரிசோதனை முடிவுகள் வரும்வரை ஒரு வாரத்துக்கு தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார். அதுவரை தொழிலாளர்களுக்கு பிடித்தம் இல்லாமல் ஊதியம் வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.