பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம் வரை சாலையின் இரு புறங்களிலும் விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அந்தப் பகுதியில் சர்வீஸ் சாலைகளை ஒட்டி அமைந்துள்ள சாலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள மழைநீர் கால்வாய்களை இடித்து அதிலிருந்து கம்பிகளை எடுக்க ஒப்பந்ததாரர்கள் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், கம்பிகளை எடுப்பதற்கு கால தாமதம் ஏற்படுவதால் சாலை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி உரிய பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தால் சாலையின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களில் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நத்தை போல் ஊர்ந்து செல்லும் காட்சிகளை காண முடிகிறது.
அவசர தேவைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் கூட நத்தைபோல் ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள தனியார் கம்பெனிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லக்கூடியவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் இந்த சாலையை கடந்து செல்லும் சூழல் ஏற்படுவதால் எதிர் திசையில் வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM