இங்கு கேட்பதற்கு ஆளில்லை என நினைப்பு : கொந்தளிக்கிறார் கனல் கண்ணன்
'ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்கள், கடவுள் நம்பிக்கையோடு கடவுளை தரிசனம் செய்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலை விட்டு வெளியே வருகின்றனர். ஆனால், வெளியே வந்ததும், கடவுள் மறுப்பு கொள்கை பேசியவரின் சிலை(ஈ.வே.ராமசாமி) உள்ளது.'அந்த சிலையை என்றைக்கு உடைத்து அப்புறப்படுத்துகிறோமோ, அன்றைக்குத் தான் ஹிந்துக்களுக்கான உண்மையான எழுச்சி நாள்' என, சினிமா சண்டை பயிற்சியாளரும், ஹிந்து முன்னணி கலை, இலக்கிய பிரிவு மாநில தலைவருமான கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஹிந்துக்களை, இரண்டாம் பட்சமாக நடத்தும் அரசியல் கட்சியினர் தான் ஆட்சி பொறுப்புக்கு வருகின்றனர்.ஹிந்துக்கள் சகிப்புத் தன்மையோடு, அவர்களுக்கு ஓட்டளிப்பதாலேயே, அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக, திராவிட இயக்கங்களைச் சேர்ந்தோர், தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதை வாடிக்கையாக்கி உள்ளனர். ஹிந்துக்களை கொச்சைப்படுத்தி பேசுவதோடு, ஹிந்து கடவுள்களை தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல காட்டிக் கொள்ளும் கட்சியினர்,
கடவுள் மறுப்பு கொள்கை பேசியவருக்கு, ஊர் முழுக்க சிலை வைத்துள்ளனர். ஏன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோவிலுக்கு எதிரிலேயே சிலை வைத்துள்ளனர். இது தவறில்லையா? இப்படிப்பட்ட சிலையை, மாற்று மத வழிபாட்டு தலங்கள் முன் வைக்க முடியுமா?
ஹிந்து பூமி என்றால், இங்கு கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நினைப்பில் தானே இதை எல்லாம் செய்துள்ளனர். இதை பொறுக்க முடியாமல் தான், ஹிந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்ட ஹிந்து உரிமைகள் மீட்பு மாநாட்டு கூட்டங்களில் தொடர்ச்சியாக பேசினேன். மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக, சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்திலும் பேசினேன்.
இது தவறு என்று விமர்சிப்போர், என்னிடம் விவாதத்துக்கு வரட்டும். நான் கேட்கும் கேள்விகளுக்கு நியாயமாக பதில் அளிக்கட்டும். பின், அவர்கள் சொல்வதை கேட்டு நடக்கிறேன்.'ஹிந்துக்கள் ஓட்டு மட்டும் வேண்டும். ஆனால், ஹிந்து உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மாட்டோம்.
ஹிந்து கடவுள்களை சிறுமைப்படுத்துவோம்' என்று கூறி, கட்சி நடத்துகின்றனர். அவர்கள், கடவுள் மறுப்பு கொள்கையை தாராளமாக பின்பற்றட்டும்; தவறில்லை. வெளிப்படையாக ஹிந்து ஓட்டுகள் தேவையில்லை என அறிவிக்கட்டும். ஹிந்துகளை தங்கள் கட்சியில் இருந்து நீக்கட்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்ட ஹிந்துக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சினிமாக்காரனான நான், 16 ஆண்டுகளுக்கு முன் ஹிந்து முன்னணியில் இணைந்து, ஹிந்து உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கிறேன்.
விரைவில் ஹிந்துக்களின் கை, எல்லா விஷயங்களிலும் மேலோங்கும். அப்போது, கடவுள் மறுப்பு கொள்கை பேசும் போலி ஆசாமிகள், இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிவர்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் —