உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, கொலீஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசித்து இவர்களில் ஒருவரை தலைமை நீதிபதி பரிந்துரைக்க வேண்டும்.
எனவே, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை தற்போதைய தலைமை நீதிபதியான என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரை ஏற்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்படுவார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், அவரது பரிந்துரையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக ஆந்திராவை சேர்ந்த என்.வி.ரமணா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.