உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி ரமணா வரும் 26-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், இவருக்கு அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்த கேள்வி எழுந்தது. பணி மூப்பு அடிப்படையில் நீதிபதி என்.வி ரமணாவுக்கு அடுத்த இடத்தில் உதய் உமேஷ் லலித் பெயர் இருக்கிறது. இந்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்க, ஓய்வு பெறும் நீதிபதி என்.வி ரமணாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில், நீதிபதி என்.வி ரமணா அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயரை பரிந்துரைத்துள்ளார்.
நீதிபதி உதய் உமேஷ் லலித், நீண்டகாலமாக வழக்கறிஞர் பதவியில் இருந்துவந்துள்ளார். 2G அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ தரப்பில் வாதாடியவர் இவர் என்பது குறிப்பிடதக்கது. அதைத் தொடர்ந்து, கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவரின் பணிக்காலம் வரும் நவம்பர் 8-ம் தேதி வரை மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.