உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வருகிற 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, மூத்த நீதிபதி யு.யு.லலித் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார்.
ஒருவேளை இந்த பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்றுக் கொள்வார். வழக்கறிஞாராக உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்து, பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகி, தற்போது, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெறுவார். கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் 13ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, 1964ஆம் ஆண்டு நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞரானார் என்பது கவனிக்கத்தக்கது.
புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞராக இருந்த நீதிபதி யு.யு.லலித், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை இவர் வழங்கியதுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முதல் அமர்விலும் நீதிபதி யு.யு.லலித் இடம்பெற்றுள்ளார்.
அதில், முக்கியத்துவம் வாய்ந்தது முத்தலாக்கிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ‘முத்தலாக்’ மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறையை “செல்லாது”, “சட்டவிரோதம்”, “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று தீர்ப்பளித்தது.
அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் தீர்ப்பை 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து, அதற்கான சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று கூறியபோது, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப் நாரிமன் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் முத்தலாக் அரசியலமைப்பின் மீறல் என தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையின்படி, முத்தலாக் நடைமுறை செல்லாதது என தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த அமர்வில் இருந்த, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.எஃப் நாரிமன், குரியன் ஜோசப் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உள்ளது என்று நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு 2020இல் தீர்ப்பளித்தது. பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமையில்லை. கோயில் நிர்வாகத்தையும், சொத்துகள் நிர்வாகத்தையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம். கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க அரசு சார்பில் குழு அமைத்து நிர்வகிக்கலாம் என்று கடந்த 2011ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குழந்தைகளின் உடலுறவு உறுப்புகளைத் தொடுவது அல்லது ‘பாலியல் நோக்கத்துடன்’ உடல் ரீதியில் தொடர்பு கொள்ளும் எந்தவொரு செயலும் ‘பாலியல் வன்கொடுமைக்கு’ சமம் என்று குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7இன் கீழ் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. பாலியல் நோக்கமே முக்கியமானது தோலோடு தோல் (skin-to-skin) தொடுவதை கணக்கில் கொள்ளக் கூடாது எனவும் அந்த அமர்வு சுட்டிக்காட்டியது.
“skin-to-skin contact with sexual intent” அதாவது பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும், ‘mere groping’ will not fall under sexual assault அதாவது பாலியல் நோக்கத்துடன் விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது என்று இரண்டு வழக்குகளில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதாவது, பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரைத் தொடுவது. குறிப்பாக, அப்படித் தொடப்படுவதை விரும்பாதவரைத் தொடுதல் என்பதை ஆங்கிலத்தில் groping என்பார்கள். தடவுதல் என்று எளிமையாக இதைப் பொருள் கொள்ளலாம். இந்த groping என்பதைத்தான் பாலியல் குற்றமல்ல என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தெரிவிக்கிறது. இந்த தீர்ப்புகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் அமர்வின் தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் பாராடப்பட்டது.
1957ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்த நீதிபதி லலித், ஜூன் 1983 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, டிசம்பர் 1985 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி செய்தார். தனது வழக்கறிஞர் பயிற்சியை ஜனவரி 1986 இல் டெல்லிக்கு மாற்றிய அவர், ஏப்ரல் 2004 இல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 8, 2022 அன்று நீதிபதி யு.யு.லலித் ஓய்வு பெற உள்ளார்.