பெங்களூர்; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்திருக்கிறது. இதையடுத்து ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிப்பதற்கும் 25-வது நாளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தொடர் கனமழை காரணமாக தண்ணீர் திறப்பட்டு வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒகேனக்கலில் இருந்து வினாடிக்கு 1,75,000 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா, கேரளா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 68,100 கன அடியாகவும், கபினி அணையிலிருந்து 15,000 கன அடியாகவும் மற்றும் இரண்டு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 83,100 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று நிலவரப்படி வினாடிக்கு 1,35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 1,60,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,70,000 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதிக நீர் திறப்பின் காரணமாக ஒகேனக்கலில் ஐந்தருவி, ஐவர்பானி, சினியருவி அனைத்து அருவிகளும் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு தண்ணீரில் முழ்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் ஒகேனக்கல் காவிரிஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. அதிக நீர் வரப்பு காரணமாக அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து 25 நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.