கடலூர்: கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கீழணைக்கு மேட்டூர் தண்ணீர், விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் 9 அடி மட்டுமே தேக்க முடியும் என்பதால் உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி உபரி நீர், காவிரி ஆற்றில் நேற்று மாலை திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் விநாடிக்கு 2 லட்சம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகளவு வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தெரிவித்துள்ளார்.