ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை நிர்வகித்து வரும் தேவஸ்தானம், சமூக நலத்திட்டங்கள், பொதுமக்களுக்கான பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. இங்கு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. அதுவும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட வங்கதேசத்தை சேர்ந்த முகமது அபுல் காசன் என்ற நபர் தனது 5 வயது மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்தார். இதற்காக திருப்பதி குழந்தைகள் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் நோய் குறித்த விவரங்களை அனுப்பி வைத்தார். இதையடுத்து ஜூலை 24ஆம் தேதி நேரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் ஜூலை 29ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அரங்கேறியது.
இதற்கான கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. தற்போது சிறுமி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். இந்நிலையில் இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் வாரிய உறுப்பினருமான சுதா நாராயண மூர்த்தி சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தார். அப்போது ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவசர சிகிச்சை பிரிவு, பொது வார்டுகள், அறுவை சிகிச்சை அறைகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டார்.
தன்னலமற்ற மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை அளித்து வரும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெகுவாக பாராட்டினார். உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, கடந்த 6 மாதங்களில் 500 குழந்தைகளுக்கும் மேல் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் 8 மாத குழந்தையும் அடங்கும். அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து நலம்பெற செய்துள்ளோம். அதுமட்டுமின்றி இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதற்கும் போதிய வசதிகள் இருக்கின்றன. இந்த சிகிச்சைக்கு பிற மருத்துவமனைகளில் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை செலவாகும். ஆனால் ஏழை, எளிய மக்களுக்காக இலவசமாக செய்து தருகிறோம். தற்போது நன்கொடையாளர்கள் உதவியுடன் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கும் திட்டத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.