கவுகாத்தி: அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா, கவுகாத்தியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: அன்சாருல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 6 வங்கதேச நபர்கள் இளைஞர்களுக்கு போதனை செய்வதற்காக அசாமுக்குள் நுழைந்துள்ளனர். கடந்த மார்ச்சில் பார்பெட்டாவில் இருந்து இந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். தனியார் மதரசாக்களில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் இமாம்களால் கல்வி கற்பிக்கப்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. ஜிகாதிகளின் செயல்பாடு என்பது தீவிரவாதிகள் அல்லது ஊடுருவல்காரர்களின் செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டது. சட்ட விரோதமாக 2016-2017ல் நாட்டிற்குள் நுழைந்தவர்கள் கொரோனா தொற்று பாதிப்பின்போது பல்வேறு பயிற்சி முகாம்களை செயல்படுத்தி உள்ளனர். இதுவரை இவர்களில் ஒருவர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளார். மதரசாக்களில் வெளிமாநிலங்களை சேர்ந்த ஆசிரியர் அல்லது இமாம்கள் இருந்தால், பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.