தந்தைக்காக உணவு வினியோகிக்கும் வேலையில் ஈடுபடும் 7 வயது சிறுவன்| Dinamalar

புதுடில்லி :தந்தை விபத்தில் சிக்கியதால், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உணவு வினியோகிக்கும் வேலையில், 7 வயது சிறுவன் ஈடுபட்டுள்ள செய்தி, சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உணவுப் பொருட்களை வீட்டிற்கு வந்து வினியோகிக்கும், ‘ஜொமாட்டோ’ நிறுவனத்தில், ராகுல் மிட்டல் என்பவர் உணவு ‘ஆர்டர்’ செய்திருந்தார்.
அவருக்கான உணவுப் பொருளை, 7 வயது சிறுவன் ஒருவன் வினியோகித்துள்ளார்.அந்தச் சிறுவனுடன் ராகுல் மிட்டல் உரையாடும் ‘வீடியோ’வை, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். அதில், தந்தை விபத்தில் சிக்கியதால், குடும்பத்தை காப்பாற்ற, அவருடைய வேலையை செய்வதாக அந்தச் சிறுவன் கூறிஉள்ளார்.காலையில் பள்ளிக்குச் செல்லும் அந்த சிறுவன், மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை சைக்கிளில் சென்று உணவுப் பொருட்களை வினியோகிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

பதிவிட்டவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அந்தச் சிறுவன் குறித்த விபரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, சமூக வலைதளப் பதிவில், அந்த நிறுவனத்தின் பெயரையும் அவர் இணைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், அந்தச் சிறுவனின் பொறுப்புணர்வுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுஉள்ளனர். அதே நேரத்தில், சிறுவன் வேலைக்குச் செல்வதற்கு பலர் கண்டனமும், வேதனையும் தெரிவித்து உள்ளனர்.இந்த சம்பவம் டில்லியில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.