புதுடெல்லி: தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
2019 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு 81 திருத்தங்களை முன்வைத்துள்ள நிலையில் தற்போது இம்மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா மீது நாடாளுமன்றக் கூட்டுக் குழு 81 திருத்தங்களையும் 12 பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. விளைவாக, இம்மசோதா திரும்பப் பெறப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்வைத்துள்ள வரையறைக்கு உட்பட்டு புதிய மசோதா உருவாக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
மத்திய அரசு 2019-ம் ஆண்டு தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. தனிநபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள் எப்படி கையாள வேண்டும் என்ற வரையறைகளை அந்த மசோதாவில் மத்திய அரசு முன்வைத்தது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தனிநபர்களின் தகவல்களை அரசு கண்காணிக்க வழிவகுக்கும் என்றும் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
அதையடுத்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பார்வைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டது. அக்குழு பல்வேறு திருத்தங்களை முன்வைத்தது. அதையடுத்து தற்போது இம்மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது.