தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு இயல்பான நடைமுறைதான்: சொல்கிறார் கார்த்தி
8/5/2022 12:11:24 AM
சென்னை: சூர்யா, ஜோதிகா, ராஜசேகர பாண்டியன் ஆகியோரின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள படம், ‘விருமன்’. வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இதில் கார்த்தி, இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, வடிவுக்கரசி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற கார்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதுரை என்றாலே எனக்கு அதிகம் பிடிக்கும். விருமன் 12ம் தேதி திரைக்கு வருவதால் ஆவலுடன் காத்திருக்கிறேன். கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படத்தில் நடித்திருக்கிறேன்.
கொம்பன் படத்துக்கு பிறகு மீண்டும் முத்தையா டைரக்ஷனில் விருமனில் நடித்துள்ளேன். எனக்கு வாழ்க்கையை கொடுத்தது மதுரை கதைதான். பருத்தி வீரனில் நடித்த பிறகுதான் உலகத்துக்கு நான் நடிகனாக அறிமுகம் ஆனேன். அதனால் மதுரையை மறக்க மாட்டேன். கிராமத்தில் உள்ள வீரம், பாசம், காதல், காமெடி என்பதே வேறுமாதிரி இருக்கும். மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் வைத்தது தான் சிறப்பு. சினிமாத்துறை சார்ந்த இடங்களில் நடைபெறும் வருமானவரித்துறை ரெய்டு இயல்பான நடைமுறைதான். மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான். அதை பெரிதாக பார்க்க எதுவுமில்லை. இதற்கு எதுவும் பின்னணி இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் திரையுலகினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகி விடுகிறது. இவ்வாறு கார்த்தி கூறினார்.