பீஜிங் :அமெரிக்க பார்லிமென்டில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் வந்து திரும்பிய மறுநாளான நேற்று, தென் சீன கடல் பகுதியில் உள்ள தைவான்
ஜலசந்தியில், ‘பாலிஸ்டிக்’ எனப்படும் அணு ஆயுதங்களை சுமந்து ராக்கெட்டுகள் வாயிலாக செலுத்தப்படும் ஏவுகணைகளை சீனா துல்லியமாக ஏவி தாக்கியது.
தைவானை அச்சுறுத்தும் விதமாக, நான்கு நாள் போர் பயிற்சியை சீன ராணுவம் நேற்று துவங்கியது. இதையடுத்து, தைவான் – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அந்தநாடு மேற்கொண்டுள்ளது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, தன் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது தைவான் சென்றார்.
‘நான்சி பெலோசி தைவான் செல்வது, எங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாக இருக்கும்’ என, அமெரிக்காவுக்கு சீனா ஏற்கனவே எச்சரித்திருந்தது.
அமெரிக்கா உறுதி
இது தொடர்பாக சீன அதிபர் ஷீ ஜிங்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்தினார். இதை மீறி நான்சி பெலோசி, கடந்த 2ம் தேதி இரவு தைவான் சென்றார்; அந்நாட்டு அதிபர் திசய் இங் — வென்னை சந்தித்து பேசினார்.அப்போது, ‘உலக நாடுகள் முன் ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்தியம் என இரு வாய்ப்புகள் உள்ளன. தைவானில் மட்டுமல்லாது உலகெங்கிலும் ஜனநாயகம் தழைத்தோங்கச் செய்ய அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. ‘சுயாட்சி புரியும் தைவானுக்கு அளித்த உறுதிமொழியை அமெரிக்கா கைவிடாது. தைவானுக்கு என்றென்றும் துணையாக அமெரிக்கா இருக்கும்’ என, தெரிவித்தார். அதன் பின், நேற்று முன் தினம் தென்கொரியா புறப்பட்டு சென்றார்.எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி தைவானுக்கு வந்தது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சீனாவின் பீஜிங் நகரில், வெளியுறவு துறை துணை அமைச்சர் சை பெங், அமெரிக்க துாதர் நிகோலஸ் பர்ன்சை நேற்று முன்தினம் அவசரமாக அழைத்து, தைவான் விவகாரம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தார். ‘எச்சரிக்கையை மீறி அமெரிக்க நடந்து கொண்டது மிகப் பெரிய தவறு; அதற்கு அமெரிக்கா உரிய விலை தர வேண்டியிருக்கும்’ என சை பெங் எச்சரித்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே, தென் சீன கடல் பகுதியில் நான்கு நாள் போர் பயிற்சியை நேற்று சீன ராணுவம் அறிவித்தது. தைவான் கடலின் கிழக்கு பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சீன ராணுவம் தொடர்ச்சியாக நேற்று மதியம் ஏவியது.
ஏவுகணை தாக்குதல்
வரும் நாட்களில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து, நீண்ட துார பீரங்கி தாக்குதல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளதாக, அந்தநாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இது குறித்து, சீன ராணுவத்தின் மூத்த கர்னல் ஷியி கூறியதாவது:தைவானின் கிழக்கு கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ராக்கெட் படையினர் ஏவுகணைகளை ஏவி சோதனையில் ஈடுபட்டனர். அதிபர் ஷீ ஜிங்பிங்கின் ராணுவ சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த ராக்கெட் படை புதிதாக உருவாக்கப்பட்டது. இது, ஏவுகணை தாக்குதலுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படை.நேற்று நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையின் போது, இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.சீன ராணுவத்தின் தாக்குதலை நேற்று தைவான் உறுதி செய்தது. கடலில் 500 கி.மீ., வரை பறந்து சென்று தாக்கக்கூடிய, ‘டாங்பெங்’ பாலிஸ்டிக் ஏவுகணைகளை, தைவானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடல் பகுதியில் சீனா ஏவியதாக தைவான் ராணுவம் தெரிவித்தது.
விமான சேவை ரத்து
பிராந்திய அமைதியை குலைக்கும் சீனாவின் பகுத்தறிவற்ற செயலுக்கு, தைவான் ராணுவம் கண்டனம் தெரிவித்தது. தைவானில் விமான போக்குவரத்து சேவையும் நேற்று ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், சீன ராணுவ செய்தி தொடர்பாளர் டான் கெபெய் கூறியதாவது:சீன ராணுவம் சொன்னதை செய்துவிட்டது. தைவான் – அமெரிக்கா இடையிலான உறவு, தைவானுக்கு பேரழிவை ஏற்படுத்தும். அந்நாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கை வாயிலாக, தைவான் – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
சீன வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
சீன வெளியுறவுத்துறை உதவி அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான ஹுவா சன்யிங் நேற்று கூறியதாவது:சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாப்பதற்காகவும், குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிப்பதற்காகவும், நன்கு சிந்தித்த பின் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை தொடர்ந்து செய்வோம். நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை காரணம் காட்டி, அந்நாட்டில் உள்ள தற்போதைய நிலையை மாற்ற சீனா முயல்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.தைவான் ஜலசந்தியில் இரண்டு பக்கங்களும் சீனாவை சேர்ந்தவையே. சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. தைவானின் உண்மையான நிலை இது தான். இதில், தேவையில்லாமல் நுழைந்து அமெரிக்கா குழப்பம் விளைவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்