புதுடெல்லி: நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயரை மத்திய சட்ட அமைச்சருக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று முறைப்படி பரிந்துரை செய்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா, இம்மாதம் 26-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அவரை அடுத்து மிக மூத்த நீதிபதியாக யு.யு. லலித் உள்ளார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதிக்கு அவரது பெயரை மத்திய சட்ட அமைச்சருக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று பரிந்துரை செய்தார்.
எஸ்.ஏ.பாப்டேவுக்கு பிறகு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரலில் என்.வி.ரமணா பொறுப்பேற்றார். 16 மாதங்களுக்கு மேலாக அவர் பதவி வகிக்கிறார். ஆனால், தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றால் அவர், 74 நாட்கள் மட்டுமே அந்தப் பதவியில் இருப்பார். நவம்பர் 8-ம் தேதி, அவர் பணி ஓய்வு பெறுவார். அவருக்குப் பிறகு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பார்.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த யு.யு.லலித், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது தந்தை யு.ஆர்.லலித், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித், 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். 1985 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த அவர், 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி ஆனார்.