”ஶ்ரீரங்கம் கோயிலின் முன்பு உள்ள பெரியார் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்று ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான கனல்கண்ணன் பேசியது சர்ச்சைக்குள் ஆகியிருக்கிறது.
இந்து முண்ணனியின் கலை மற்றும் பண்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் கனல் கண்ணன். அதன் சார்பில் சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் கனல், கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
”இந்துவாக இருப்பதே மிகப்பெரிய பெருமை. ஒரு காலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு மதமாற்றம் முடிச்சாங்க. ஆனால் இப்போ மதமாற்றம் என்ற முறையில் நாடுகளை பிடிக்கிறாங்க. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்கின்றனர். அப்படி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் (பெரியார்) சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்று பேசியிருக்கிறார்.
இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர் தலைமறைவாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நேற்று இரவே அவர் கைது செய்யப்பட்டார் என்ற பேச்சுக்கள் கிளம்பின. இதுகுறித்து தகவல் அறிய கனல் கண்ணனைத் தொடர்பு கொண்டால், அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.