மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று வரும் வெளிநாட்டு வீரர்கள், பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைச் சின்னங்களை நேரில் கண்டு ரசித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கிய 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 10ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 6 நாட்களாக தொடர்ந்து செஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில், 7-வது நாளான இன்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சொகுசு விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் தங்களது உறவினர்களுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களை கண்டு ரசித்தனர்.
இதில், மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணைய் உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைச் சின்னங்களை,வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த தின்பண்ட கடைகளில் தமிழக பாரம்பரிய உணவுகளான இளநீர், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இதனால், மேற்கண்ட சுற்றுலாதல பகுதிகளின் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM