தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் அருகே உள்ள புது பாலத்தை பயன்படுத்த தடைவிதித்து சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களும், இளைஞர்களும் செல்பி எடுப்பதை தடுக்க முடியாததால் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு, தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் தடுப்பணையுடன் கூடிய கதவணை கட்டவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 8 ஆயிரத்து 150 கன அடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. முழு கொள்ளளவான 52 அடியில் தற்போது 51 அடிக்கு நீர் உள்ளது. நீர்வரத்து 6ஆயிரத்து 300 கன அடியாக உள்ளதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரியாற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், தீயணைப்பு துறையினர் ஒவ்வொரு வாகனத்திற்கும் பாதுகாப்பாக தண்ணீரை கடந்து செல்ல உதவி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதையும் படிக்க: இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்! சென்னையில் நாளை விழாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM