கொல்கத்தா: மேற்கு வங்க அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி வீடுகளில் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பார்த்தா சட்டர்ஜி அமைச்சரவையில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையை நேற்று விரிவாக்கம் செய்தார். இதில், கடந்த ஆண்டு பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்னேகாஷிஷ் சக்கரவர்த்தி, பார்த்தா பவுமிக், உதயன் குஹா மற்றும் பிரதிப் மஜும்தார் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதுதவிர, பிர்பஹா ஹன்ஸ்தா, விப்லவ் ராய் சவுத்ரி, தாஜ்முல் ஹுசைன் மற்றும் சத்யஜித் பர்மன் ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை கட்சியின் 16 மாவட்ட செயலாளர்களை மாற்றி முதல்வர் மம்தா உத்தரவிட்டார். மாநிலத்தில், புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதன்மூலம் மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கும்.