‘பாடகராக நம்மிடையே அறிமுகமானவர் ஶ்ரீலேகா பார்த்தசாரதி. தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ரஜினி’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நடிகையாக அடி எடுத்து வைத்திருக்கிறார்.
அவருடைய ஆன்மிக நம்பிக்கை குறித்தும், அவருக்கு சாய் பாபாவின் மீதான பற்றுதல் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
நமக்கு மேல இருக்கிற ஒரு சக்தியாக தான் ஆன்மிகத்தைப் பார்க்கிறேன். அந்த சக்தி எனக்குள்ள ஒருவித பாசிட்டிவ் விஷயங்களைக் கடத்துகிறது என்கிற நம்பிக்கை அதிகமாகவே இருக்கு. தஞ்சாவூர் பக்கத்தில் சிறுவாச்சூர் என்கிற இடத்தில் இருக்கக்கூடிய மதுரை காளியம்மன் தான் எங்களுடைய குலதெய்வம். என் இஷ்ட தெய்வம்னா அது மதுரை மீனாட்சி அம்மனும், மைலாப்பூரில் இருக்கிற முண்டக்கண்ணியம்மனும்தான். அதுமட்டுமில்லாமல் விநாயகரும், திருப்பதி பாலாஜியும் தாயாரும் கூட பிடிக்கும். எங்க அப்பா ஆன்மிகம் சார்ந்து நிறைய என்கிட்ட பேசுவார். ஏகாதசிக்கு என்னென்ன விஷயங்கள் பண்ணனும், முக்கிய நாட்களில் எப்படி வழிபடணும்னு எல்லாமே சொல்லுவார். அதெல்லாம் தாண்டி எனக்கே கடவுள் நம்பிக்கை இருக்கு.
திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கும், கேகே நகர் ஐயப்பன் கோயிலுக்கும் அடிக்கடி போவேன். எப்ப மனசு சோர்வா இருக்கோ அப்போதெல்லாம் தவறாம அந்த ஐயப்பன் கோயிலுக்கு போயிடுவேன். அதனாலேயோ என்னவோ என் பையன் அய்யப்பன் சாமியுடைய நட்சத்திரத்தில் தான் பிறந்தான் என்றவரிடம் அவருடைய வாழ்க்கையில் நடந்த அற்புதம் குறித்துக் கேட்டோம்.
2010-ல் ஒரு பெரிய விபத்தை எதிர்கொண்டேன். வேனில் ஒரு கச்சேரிக்கு போயிட்டு இருக்கும்போது விபத்து ஏற்பட்டு வேன் நிலை தடுமாறி விழுந்துடுச்சு. அந்த நேரம் நான், எல்லாம் முடிஞ்சது… நாம இருக்க வாய்ப்பே இல்லைன்னு நினைச்சேன்… இல்ல உன் கூட நான் இருக்கேன்னு என்னை வழிநடத்துனது கடவுள் தான்னு நினைக்கிறேன். அந்த சமயம் தலையில் அடிபட்டிடக் கூடாதுன்னு என் கையை தலைக்கு மேல வச்சிக்கிட்டேன். அப்படி பண்ண தூண்டினது கூட கடவுள் தான்னு நினைக்கிறேன். நான் வேனில் இருந்து வெளி வந்த அடுத்த நிமிஷம் வேன் வெடிச்சு சிதறிடுச்சு. அந்த விஷயத்துக்கு பிறகு என் வாழ்க்கையில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் நடந்துச்சு. 2013,14 கச்சேரி, பாடல்கள்னு நான் ரொம்பவே பிஸியாக இருந்தேன் என்றவர் அவருக்கும், பாபாவுக்குமான நெருக்கம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
சின்ன வயசில நிறைய ஶ்ரீசக்தி சாய்பாபாவுடைய வகுப்புகளுக்கு போயிருக்கேன். சக்தி சாய்பாபா வேற, சீரடி சாய்பாபா வேற தான்… ஆனாலும், அந்த சாய் பாபா என்கிற கான்செப்ட் எங்க வாழ்க்கையில் ரொம்ப சின்ன வயசிலேயே வந்துடுச்சு. எங்கேயாவது போகும்போது அவருடைய முகம் கண்ணில் படும். சாய் பாபா பஜனை எல்லாம் பாடும்போது அவருடைய போட்டோவில் இருந்து பூ கீழே விழும். இதை நான் மிகைப்படுத்தி சொல்றதாக நினைக்க வேண்டாம்!
சமீபத்தில், நான் நடிக்கும் ‘ரஜினி’ சீரியலில் முதல் சீன், முதல் ஷாட் நான் சாய் பாபாவை வணங்கும் மாதிரிதான். அப்பவும் தானாகவே பூ விழுந்தது. அவருக்கும் எனக்குமான நெருக்கம் ரொம்பவே பலமா இருக்கு. என்னுடைய மகன் பிறந்ததுக்கு கூட நிறைய வேண்டுதல்கள் பண்ணியிருக்கேன். சீரடி சாய்பாபாகிட்ட வேண்டிக்கிட்டு ஶ்ரீசாய் சத்சரிதம் படிச்சிருக்கேன். அதை படிக்கப்படிக்க என் மகன் ஆருஷ் பிறந்தான். அவர் என் வாழ்க்கையில் மிக முக்கியம்!” என்றார்.