ஐரோப்பிய நாடுகள் இதுவரை காணாத அளவிற்கு அதிகப்படியான வெப்ப அலைகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஸ்பெயினில் கடந்த ஜூலை 10 – 17 தேதிவரை மட்டும் வெப்ப அலைக் காரணமாக 679 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ஸ்பெயினில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரச் செலவுகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், ஸ்பெயின் வெப்பநிலை ஒரு மாதத்தில் 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியிருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசியிருந்தார். அப்போது அவர், மின்சார சேமிப்பு என்பது தற்போது மிக அவசியமானதாக மாறியிருக்கிறது. எனவே, அரசு அதிகாரிகள் மற்றும் தனியார்த்துறையில் பணிபுரிபவர்கள் டை அணிவதைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் குறைந்த ஆடைகளையே அணிகிறேன். நாட்டின் வெப்பநிலை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் இறுக்கமான ஆடைகளைத் தவிருங்கள்” என்று கூறியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “அலுவலகங்கள், கடைகள், பார்கள், திரையரங்குகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஏர் கண்டிஷனிங் அளவு 27 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் (சுமார் 80 டிகிரி பாரன்ஹீட்) இருக்க வேண்டும். 27 டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருக்கக் கூடாது” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகளின் கதவுகள் மூடியே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் சிக்கனம் மற்றும் மின்சார சிக்கனம் செய்யவேண்டும் என்பதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.