பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சித்ரதுர்கா சென்றார். அங்குள்ள லிங்காயத்து முருக ராஜேந்திரா மடத்துக்கு சென்ற ராகுல் காந்தி மடத்தின் தலைமை மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு சரணரு, ஹாவேரி ஹொசமட சுவாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
அப்போது, ராகுல் காந்தி கூறுகையில், ‘‘பசவண்ணாவின் கொள்கைகளை படித்து, பின்பற்றி வருகிறேன். இஷ்டலிங்க தீட்ஷை மற்றும் சிவயோக பயிற்சி குறித்து கற்க விரும்புகிறேன். இங்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்” என்றார். இதையடுத்து மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு சரணரு ராகுல் காந்திக்கு திருநீறு பூசி, இஷ்டலிங்க தீட்ஷை வழங்கினார்.
பின்னர் ஹாவேரி ஹொசமட சுவாமி பேசுகையில், ”இங்கு வந்த பிறகே இந்திரா காந்தி பிரதமர் ஆனார். அதே போல ராஜீவ் காந்தியும் பிரதமர் ஆனார். தற்போது ராகுல் காந்தி இங்கு வந்துள்ளதால் ஒரு நாள் நிச்சயம் பிரதமர் ஆவார்” என்றார். அப்போது குறுக்கிட்ட மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு சரணரு, ‘‘இது அரசியல் பேச வேண்டிய இடம் அல்ல” என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியினருக்கு உத்தரவு
கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தார்வாடில் ராகுல் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி பேசியதாவது: அடுத்த ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 150 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி பணி மேற்கொள்ள வேண்டும். பாஜக அரசின் ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியிலும், ஊடகங்களிலும் விவாதிக்கக்கூடாது. முக்கிய நிர்வாகிகள் கருத்து பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். முதல்வர் யார் என்பதைகுறித்து யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியானது.