5ஜி அலைக்கற்றை ஏலம் முறையாக நடந்ததா?! – கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

இந்தியாவின் தொலைத்தொடர்பில் 5-ம் தலைமுறை சேவையைக் கொண்டுவருவதற்காக 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. கடந்த ஜூலை 26-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற்ற அந்த ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்வினி வைஷ்ணவ்

சில வாரங்களுக்கு முன்பாக, 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பங்கேற்கவில்லை. ஆனால், இதுவரை தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமம், இந்த ஏலத்தில் கலந்துகொண்டு அலைக்கற்றையைப் பெற்றிருக்கிறது.

தொலைத்தொடர்பு சேவை

ஏலத்தின் நிறைவு நாளன்று, 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 5 ஜி அலைக்கற்றை ஏலத்தின் அடிப்படை மதிப்பாக ரூ. 4.30 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

‘5 ஜி அலைக்கற்றை ஏலம், முதல் நாளிலேயே ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடியைத் தொட்டது. ஆனால், அடுத்த ஆறு நாள்களில் கூடுதலாக 5 ஆயிரத்து 173 கோடி ரூபாய் அளவுக்கே ஏலத்தொகை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், அலைக்கற்றை ஏலத்தில் மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்துகொண்டிருக்கிறது’ என்ற குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. மேலும், ட்விட்டரில் #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

ஆ.ராசா

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தி.மு.க இடம்பெற்றிருந்தது. அப்போது நடைபெற்ற 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாகவும், அதனால் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. அந்தப் பிரச்னையில் அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் ஆ.ராசா பதவி விலகினார். 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு அந்த விவகாரம் முக்கியக் காரணமாக இருந்தது. 2 ஜி விவகாரத்தையும் 5 ஜி ஏல விவகாரத்தையும் இணைத்து சமூக ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 3-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசாவிடம் 5 ஜி ஏலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “வெறும் 30 மெகா ஹெர்ட்ஸ் 2 ஜி அலைக்கற்றையை, டிராயின் பரிந்துரைப்படி கொடுத்தபோது, ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று அன்றைக்கு இருந்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் அறிக்கை அளித்தார். அது, ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி. இன்றைக்கு இவர்கள் ஏலம் விட்டிருப்பது 51 ஜிகா ஹெர்ட்ஸ். அதாவது, மெகா ஹெர்ட்ஸைவிட, கிகா ஹெர்ட்ஸின் திறனும், அளவும் 20 மடங்கு அதிகம். அதன்படி பார்த்தால், 5 ஜி ஏலம், ஐந்து அல்லது ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு போயிருக்க வேண்டும். திட்டமிடுதல் மோசமா அல்லது நான்கைந்து கம்பெனிகளுடன் இணைந்து மத்திய அரசு மோசடி செய்ததா என்பதை விசாரணை செய்ய வேண்டும். இது, மிகப்பெரும் மோசடி” என்றார் ஆ.ராசா.

செல்போன் டவர்

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்தியதால், இரு அவைகளிலும் அமளி துமளி ஏற்பட்டது. தற்போது, 5ஜி அலைக்கற்றை ஏல விவகாரம் புதிதாக சேர்ந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக பா.ஜ.க-வுக்கு 2 ஜி விவகாரம் கிடைத்தது. அதேபோல, 5 ஜி விவகாரத்தை எதிர்க் கட்சிகள் கையிலெடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால், அதை எதிர்கொள்வது பா.ஜ.க அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

பொதுவெளியில் குற்றச்சாட்டு எழுந்துவிட்ட பிறகு, உண்மையில் 5 ஜி ஏலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மக்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.