ஒரு பெரிய நகைக்கடையில் நடக்கும் கொள்ளை. அதில் பாதிக்கப்படுபவர்களும், அந்தக் கொள்ளையை நடத்தியவர்களுக்குமான ஆடுபுலி ஆட்டமே இந்த `எண்ணித்துணிக’.
சர்வதேச மாஃபியாக்கள் தேடும் அளவு விலைமதிப்புமிக்க வைரங்களைப் பினாமி வைத்திருக்கும் ஒரு நகைக்கடையில் பதுக்கி வைத்திருக்கிறார் அமைச்சர். இதை மோப்பம் பிடிக்கும் அமெரிக்க வைரக்கடத்தல் கும்பல் அந்த வைரங்களைத் தூக்கும் டாஸ்கை உள்ளூர் டீம் ஒன்றுக்குக் கொடுக்கிறது. இந்தக் கொள்ளையின் போது நாயகி கடைக்குள் இருக்க, நாயகன் என்ன செய்கிறான் என்பதே கதை!
துரு துரு ஐடி இளைஞனாக நாம் பார்த்துப் பழகிய ஜெய். ஆக்ஷன் காட்சிகளில் ஒரு லெவல் அப்கிரேட் ஆகியிருக்கிறார். நடிப்பைப் பற்றியும் அதையே கூறமுடியுமா எனத் தெரியவில்லை. டாக்டர், பீஸ்ட் படங்களில் மகாளியாக நடித்த சுனில் ரெட்டி இந்தப் படத்தில் வைரங்களைப் பறிகொடுக்கும் சீரியஸ் அமைச்சர். முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் கதாபாத்திரத்திற்குப் பொருந்திப்போகிறார். கொள்ளைக்கு ஸ்கெட்ச் போடும் டீமின் தலைவராக வம்சி கிருஷ்ணா. அவரே பல முறை நடித்துவிட்ட வில்லன் கதாபாத்திரம். ஜெய்யின் காதலியாக அதுல்யா. மேலே சொல்ல ஒன்றுமில்லை. நீதி மாணிக்கத்தின் இதயத்தரசியாக வித்யா பிரதீப். ‘டாணாக்காரன்’ அஞ்சலி நாயரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் மாறி மாறிச் சந்தித்துக்கொள்ளும் இந்தக் கதையைக் கொண்டு விறுவிறு திரில்லர் சினிமா படைக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன்.
ஒன்லைனாகக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் கதைதான். ஆனால், சுமாரான திரைக்கதை மற்றும் படமாக்கலால் சறுக்கிறது ‘எண்ணித்துணிக’. காதலிக்காகத்தான் மொத்த கொள்ளைக்கூட்டத்தையும் வேரறுக்கச் சபதம் போடுகிறார் ஹீரோ. ஆனால், அந்த காதல் கதையோ எந்த அழுத்தமும் இல்லாமல் சொல்லப்படுகிறது. ரெண்டு பாட்டு, நான்கு சம்பிரதாய காதல் காட்சிகள் என முதல் பாதியை இழுத்தடிப்பதே இந்தக் காதல் காட்சிகள்தான். இதைத் தவிர்த்து ஒரு திரில்லராக முதல்பாதி விறுவிறுவென சென்றாலும் ஹீரோவின் மூளைக்கோ நம் மூளைக்கோ எந்த வேலையும் வைக்கவில்லை திரைக்கதை. ஹீரோ விசாரிகக்ச் செல்லும் இடத்திலெல்லாம் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்துக் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்கிறார்கள். அமைச்சர் கொடுக்கும் அழுத்தத்தில் போலீஸ் தீவிரமாக விசாரிப்பதாக அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால், க்ளைமாக்ஸில் எல்லாம் முடிந்த பிறகு வரும் போலீஸாகவே வழக்கம் போல் வந்து செல்கிறார்கள். காதலுக்குத் தூது போகும் வழக்கமான நண்பர் கதாபாத்திரமாக வரும் குரேஷிக்கு காக்கிச்சட்டையும் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.
இன்டர்வெல் ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்தினாலும், மீண்டும் இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து நம்மை சோதிக்கிறார்கள். லூப்பில் ஓடும் சாம்.சி.எஸ் பின்னணி இசையும் படத்துக்கு எந்தப் பலமும் சேர்க்கவில்லை. பாடல்களும் அவை இடம்பெறும் இடங்களும் மைனஸ். திரைக்கதை எங்கேயாவது சிக்கி நிற்கும்போதெல்லாம் ‘அவர் இப்படிப் பார்த்தார், அதனால் இப்படித்தான் இருக்கும்!’ என வியூகத்திலேயே நாயகன் பிரச்னையைத் தீர்ப்பதாகக் காட்டி தப்பித்துவிடுகிறார்கள். இப்படித் திரைக்கதைக்குப் பஞ்சர் ஒட்டி ஒட்டி க்ளைமாக்ஸ் வந்து சேர்கிறது படம்.
முன்பு சொன்னது போல ஒரு நல்ல திரில்லர் படத்துக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இருக்கும் கதை. தெளிவான திரைக்கதையும் அழுத்தமான காட்சியமைப்பும் இருந்திருந்தால் நாமும் துணிந்து பாராட்டியிருக்கலாம்!