சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று, பொதுக்குழு தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக, ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், அம்மன் வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது.
இதற்கிடையில், பட்டியலிடப்பட்ட படி, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி: எதற்காக இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி கடிதம் கொடுத்தீர்கள்? என் தீர்ப்பில் என்ன தவறு உள்ளது?
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி: பொதுக்குழு நாளன்று கடைசி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதால், எங்களுக்கான சட்டரீதியிலான அடுத்தகட்ட வாய்ப்பு தடைபட்டது. மேலும், ‘மனுதாரர் (ஓபிஎஸ்) அடிக்கடி நீதிமன்றத்தை நாடுவதையே வழக்கமாக வைத் துள்ளார்’ என்பது போன்ற தனிப்பட்ட, கடுமையான கருத்துகளை அந்த தீர்ப்பில் தெரிவித்தீர்கள்.
களங்கப்படுத்தும் செயல்
நீதிபதி: என் தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால், தீர்ப்பில் திருத்தம் செய்யுமாறு என்னிடமே முறையிடலாம். அல்லது, அதை எதிர்த்து சட்டரீதியாக மேல்முறையீடு செய்யலாம். அதைவிடுத்து, வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றுமாறு கடிதம் கொடுத்துள்ளீர்கள். இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமின்றி, கீழ்த்தரமான செயலும்கூட. நான் தீர்ப்பில் கூறிய கருத்துகளை நியாயப்படுத்தும் வகையில் மனுதாரரின் தற்போதைய செயல்பாடு உள்ளது. இதில் மனுதாரரை தவறாக வழிநடத்தாதீர்கள். நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தால், அதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்
பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண்: இந்த விஷயத்தை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம்.
நீதிபதி: எனக்கு எதிராக கடிதம் கொடுத்தது தொடர்பான நடைமுறையை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது வழக்கை விசாரிக்கிறேன். வாதங்களை தொடரலாம்.
ஓபிஎஸ் தரப்பு: வழக்கை வரும் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்.
இவ்வாறு வாதம் நடந்தது. ஆனால், ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மற்றொரு மனுதாரரான அம்மன் வைரமுத்து தரப்பின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
கடிதம் குறித்து பரிசீலனை
இந்தச் சூழலில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி முன்பு ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் ஆஜராகி, தங்கள் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்தது குறித்து முறையிட்டார். இன்றைக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்தார். நீதிபதியை மாற்றக் கோரி கொடுக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.