சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டு கோயில் திருவிழாவின்போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் குற்றவாளிகளாக சொல்லப்பட்டிருந்த 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்.
முன்னதாக கச்சநத்தம் கிராமம் – ஆவாரங்காடு கிராமம் பகுதியில் கடந்த 28.5.2018 அன்று நடந்த கோயில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டிருந்தது. திருவிழாவின்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட அந்த மோதலில் ஆவரங்காடு கிராம இளைஞர்கள் மீது பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 20ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 9 மணி அளவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து வெட்டியதில், நிகழ்விடத்திலேயே ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் பலியாயினர்.
இச்சம்பவம் தொடர்பாக பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குபதிந்து 33 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 33 பேரில் மூன்று பேர் சிறார்கள். மீதமிருந்த முப்பது பேரில் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர். ஒருவர் தப்பியோடியதால் 27 நபர்களுக்கு மட்டும் இவ்வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்தது.
கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், தண்டனை விபரங்கள் ஆக.3ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தண்டனை விவரங்களை ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமைக்கு இரண்டாம் முறையாக ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமாரன் உத்தரவிட்டார்.
அதன்படி இந்நிலையில் இவ்வழக்கு இன்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் வந்தது. அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விதித்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM