முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செய்யும் விதமாக, மெரினாவில் அமைந்துள்ள அவரின் நினைவிடம் அருகே கடலினுள் 134 அடி உயரத்துக்குப் பேனா சின்னத்தை நிறுவ மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலைக் கேட்டு தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியுள்ளது. கருணாநிதி மறைந்தபோது அவருடன் சேர்த்து அவர் பயன்படுத்திய பேனாவும் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அங்கே 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல கருணாநிதியின் பேனாவுக்கும் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. கருணாநிதி நினைவிடத்திலிருந்து நடுக்கடலில் அமைக்கப்படும் ‘பேனா’ நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் அமைக்கப்படவுள்ளதாகச் சொல்கிறார்கள். அலைகள் எழும்பும் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படவுள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதையும் அமைக்கப்படவுள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் 81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஜூன் 20ல் சென்னை மாவட்ட, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்குக் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரும் நடைமுறைகளில் பொதுப்பணித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காகச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை (EIA) மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) கோரி தற்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்குத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சின்னம் அமைக்கத் தி.மு.க அரசு தீவிரம் காட்டுவது சரியா என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜிடம் கேட்டோம். “தமிழ்நாட்டில் இருக்கும் கடனுக்கு 80 கோடி ரூபாயில் பேனாவுக்குச் சிலை அமைக்க வேண்டிய தேவை என்ன? 3,000 கோடிக்கு சிலை அமைக்கும் இந்த நாட்டில் அந்தத் தொகையில் எவ்வளவோ நலத்திட்டங்களைச் செயல்படுத்தலாம் எனக் கேட்டவர்கள்தான் இப்போது 80 கோடிக்குச் சிலை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளைச் சீரமைக்க மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ளத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்துகிறது. அறிவின் அடையாளமாகப் பேனா வைக்கிறோம் என்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோம் அறிவை உருவாக்கும் கொடுக்கும் பள்ளியின் கட்டடங்களைச் சீரமையுங்கள். பல லட்சம் பேரின் அறிவை உருவாக்க அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள் என்றுதானே சொல்கிறோம். கருணாநிதியே இருந்தால் இதைத்தான் செய்யச் சொல்லியிருப்பார். பேனா வைப்பதை விட்டுவிட்டு பள்ளிக்கூடம் கட்டுங்கள், அதைச் சீரமையுங்கள்.
கடல் யாருக்கானது, கடல் வாழ் உயிரினங்களுக்கானது. அதில் கட்டடம் கட்டுவது எந்தளவு சுற்றுச்சூழல் பாதிக்கும், உயிரினங்கள் பாதிக்கும். கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைக்கவே கூடாது என்று சொல்லவில்லை. மதுரையில் கட்டும் நூலகத்திலோ அறிவாலயத்திலோ வைத்துக்கொள்ளுங்கள். கடலுக்குள் வேண்டாம் என்பதுதான் நமது கருத்து” எனப் பேனா வைப்பது தொடர்பான தனது கருத்துப் பகிர்ந்துகொண்டார்.
கருணாநிதியின் பேனாவுக்கு நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரனிடம் கேட்டோம். “கலைஞர் தலைவரின் பேனாவுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை. பேனா என்பது குறியீடு. தமிழ்நாட்டில் அதிக நாள்கள் முதல்வராக இருந்த முதலமைச்சர் கருணாநிதி. அதன்மூலம் பல்வேறு சமூக சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். இனத்துக்கு உழைத்தவர். திரைத்துறையில் அவரின் பேனா நிகழ்த்திய மாற்றங்களும் அசாதாரணமானவை. எழுத்தாளனாக, கதாசிரியராகவும், ஆட்சியாளராகவும், கட்சித் தலைவராகவும் அவர் ஆற்றிய பணி அளப்பரியது. அப்படிப்பட்டவரின் உன்னதமான பேனாவுக்கு நினைவுச்சின்னம் வைப்பதில் தவறில்லை. விமர்சனம் வைப்பவர்கள் ஏனென்று காரணம் சொல்லாமல் கலைஞர் என்றவுடன் எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றாம் தரமான விமர்சனங்களைத்தான் அவர்கள் வைக்கிறார்கள். தலைவர் கலைஞரின் பேனாவுக்கு இருந்த வலிமை வேறெதற்கு இருந்திருக்கிறது. அண்ணாவுடன் புத்தகமும் பெரியாருடன் தடியும் இருப்பதுபோல கலைஞருடன் பேனா இருக்கும். அதுதான் அவரின் சிறப்பு. அதில் தவறில்லை.
அண்ணாவுக்கு அண்ணா சதுக்கம் என்ற பெயரில் நினைவுச்சின்னம் அமைக்கும்போதும் மிகப்பெரிய விமர்சனம் எழுந்தது. ஆனால், அவற்றையெல்லாம் மீறி அண்ணாவுக்கு மரியாதை செய்தார் கலைஞர். ஒவ்வொரு காலகட்டத்தில் நினைவுச் சின்னம் எழுப்புவது அந்தக் காலகட்டத்துக்கு இருக்கும் சிந்தனை வளர்ச்சியைப் பொறுத்தது. என்ன செய்தாலும் விமர்சிப்பவர்கள் மத்தியில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை” எனப் பதிலளித்தார்.