சென்னை/ சேலம் / திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே, வெள்ளப் பெருக்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
அணைகளில் இருந்து முன்னறிவிப்பின்றி நீர்திறப்பை அதிகரிக்கக் கூடாது என்றும், வெள்ள பாதிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த 16-ம் தேதி அணை நிரம்பியது. அதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, நேற்று மதியம் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சத்து 87 ஆயிரம் கனஅடி என காவிரி ஆற்றில் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் தொட்டபடி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. பல பகுதிகளில் கரையைக் கடந்தும் வெள்ளம் பாய்கிறது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகர், மணிமேகலை நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த மக்கள் பரிசல் மூலம் மீட்கப்பட்டு பள்ளி, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள முனியப்பன் கோயில் மற்றும் அப்பகுதியில் உள்ள 200 குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல், பவானி பாலக்கரை, காவிரி நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளிலும் காவிரி நீர் புகுந்தது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் நேற்று மாலை நிலவரப்படி 1.60 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் காவிரியில் 56,254 கனஅடியும், கொள்ளிடத்தில் 90,405 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கரைகள் பலவீனமாக உள்ள இடங்களை நீர்வளம், வருவாய் மற்றும் காவல் துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால், அதை சரி செய்யத் தேவையான முன்னேற்பாடுகளுடன் நீர்வளத் துறையும் மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் உள்ளன.
நீரில் மூழ்கிய வாழை
காவிரியில் அதிக நீர்வரத்து காரணமாக திருச்சி – கல்லணை சாலையில் உத்தமர்சீலி அருகே தண்ணீர் கரை வழியாக வழிந்து கொள்ளிடம் ஆற்றில் சென்று கலக்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் பலநூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, உள்துறைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஏ.ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி கரையோர மாவட்டங்களான திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்கள்:
காவிரியில் அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்கள் பாதிப்புக்குள் ளாகக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட் டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், உடனடியாக அங்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் உடனடியாக திருச்சி மாவட்டத்துக்கு செல்ல வேண்டும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா 40 வீரர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்க்ளை அனுப்ப வேண்டும்.
இப்பகுதிகளில் பயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் நேரடி களஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்களும் மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். கனமழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில், குறிப்பாக இரவு நேரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்க வேண்டும்.
அனைத்து நிலை அலுவலர்களையும் கரையோர பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சில இடங்களில் மழையில் வீணாகிவிடுவதாக செய்திகள் வருகின்றன. நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்ப்பாய்கள் கொண்டு மூட வேண்டும். உடனடியாக அவற்றை சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து, அதன்படி செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.