கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து இன்று (04ம்-தேதி) மதியம் 8150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
2 நாட்களாக பெய்த கனமழையால், இன்று காலை (4-ம் தேதி) 6 மணியளவில் அணைக்கு நீர்வரத்து 2800 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து 6300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணியளவில், நீர்வரத்து 6300 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில், 51 அடிக்கு தண்ணீர் உள்ளது.
ஆற்றை கடக்க, குளிக்க தடை
இதனால், அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக விநாடிக்கு 8150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அணைக்கு பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் முழ்கியபடி தண்ணீர் செல்கிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே இரவில் யாரும் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறும்போது, தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கெலவரப்பள்ளிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியில் இருந்து வரும் தண்ணீரால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும், அதிகரிக்கும் என்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
கிருஷ்ணகிரி அணையில் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணைக்குள் செல்லும் பிரதான வழிகள் அடைக்கப்பட்டு, அணை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய பணிகள் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் நெல் நடவு, சிறுதானியங்கள் விதைப்பு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.