புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சிறை கைதிகளை அடையாளம் காணும் 1920-ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காணவும் விசாரணை நடத்தவும் ஏதுவாக சிறைக் கைதிகள் மற்றும் பிறரின் அடையாள தரவுகளை சேகரிக்கவும் பாதுகாக்கவும் இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
இதன்படி, கைது செய்யப்படுவோர் மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவோர் தங்களின் விரல் ரேகை, விழித்திரை மற்றும் கருவிழி ஸ்கேன், கையெழுத்து, உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு போன்ற தரவுகளை பகிர்ந்து கொள்வது கட்டாயம் ஆகிறது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் தேசிய குற்ற ஆவண காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, 75 ஆண்டுகள் மின்னணு வடிவில் பாதுகாக்க இந்த சட்டம் வகை செய்கிறது. அளவீடுகளை எதிர்க்கும் அல்லது கொடுக்க மறுக்கும் எந்தவொரு நபரின் அளவீடுகளையும் எடுக்க காவல் துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.