திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நிரம்பியுள்ள முல்லைப் பெரியாறு, மலம்புழா உட்பட 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து தீவிரமாக மழை பெய்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. முல்லைப் பெரியாறு அணை 137 அடியை தாண்டியதை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டது. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு சில அடிகளே உள்ளதால் அந்த அணைக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மிக முக்கிய அணைகளில் ஒன்றான மலம்புழா அணையும் நேற்று திறக்கப்பட்டது.