2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு இன்றுவரை முழுமையான தீர்வு எட்டப்படாமலே இருக்கிறது. பல நாடுகளில் முதல் அலை, இரண்டாம் அலை தாண்டி கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் நிபுணர்களும் கொரோனாவுக்கு எதிராக முழுமையான தீர்வுக்குத் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுதான் இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான், முதல் டோஸ், இரண்டாம் டோஸ் தடுப்பூசி கடந்து பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்கின்ற நிலையை அடைந்திருக்கிறோம்.
இந்த நிலையில் பாபா ராம்தேவ், “கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தடுப்பூசி மட்டும் போதாது. யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் துணையும் இருக்க வேண்டும். யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் ஆதரவு இல்லாமல், நீங்கள் எவ்வளவு பெரிய ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் சரி, எந்த தடுப்பூசியாலும் கொரோனா வைரஸுக்கு எதிராக நிரந்தர நோய்த்தடுப்பு அளிக்க முடியாது.
உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரிகளும்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உலகம் மீண்டும் யோகா மற்றும் ஆயுவேதத்துக்கு திரும்பும்” என்று நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது கூறினார்.
இந்த கருத்து பெரும் விமர்சனத்துக்குள்ளானதையடுத்து, “இது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், நான் வருந்துகிறேன்” என பாபா ராம்தேவ் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், பீகார், சத்தீஸ்கர் மாநிலங்களிலுள்ள இந்திய மருத்துவ சங்கம், பாபா ராம்தேவுக்கெதிராக புகார் மனு அளித்திருக்கின்றன.