கொள்ளிடம்: ஆர்ப்பரிக்கும் வெள்ளம்; மீட்புப் பணியில் 400 இளைஞர்கள் – அரியலூர் ஆட்சியர் நம்பிக்கை

“கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் உபரி நீரால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வெள்ளம் பாதித்தால் மக்களைக் காப்பற்ற 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அதே போல் உணவுப் பொருள்கள் இருப்பிட வசதி என அனைத்தும் தயாராக உள்ளது” என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

அரியலூர்

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில். “கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் வந்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என 12 பகுதிகள் கண்டறியப்பட்டுத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்காகப் பள்ளிக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

அவர்களுக்குச் சாப்பாடு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்க அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்களை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றி அனைத்து அத்தியாவசிய பொருள்களும் இருப்பு வைக்கவும் கூட்டுறவுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக முழுமையாகச் செய்து தரத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடும் வெள்ளப்பெருக்கு

கொள்ளிடத்தில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அதனால் பொதுமக்களோ கால்நடைகளோ பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அந்தந்த பகுதிகளில் உள்ள 400 இளைஞர்களைத் தயார் செய்து அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவும் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

காவல்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களை 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றோம். அதிக அளவில் தண்ணீர் வந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை விட பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி

இதற்காக அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய சாகுபடி செய்துள்ள பயிர்கள் குறித்த முழு விவரங்களையும் தயார் செய்து வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பயிர் காப்பீடு பெற்றுக் கொள்ள வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரையோரம் உள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மற்றும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொள்ளிடத்தில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு

வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் செல்போனிற்கு எப்பொழுது வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம். மேலும் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு வெள்ள சேதங்கள் குறித்து தெரிவிக்கலாம். யாருக்கும் எந்த வித பிரச்னையாக இருந்தாலும் தயங்காமல் அழைத்து பேசலாம் உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.