மும்பை: மகாராஷ்டிராவில் வீட்டுவசதி மற்றும் வளர்ச்சி ஆணையம் சார்பில் பத்ரா சால் பகுதியை மேம்படுத்த கடந்த 2007-ல் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் ரூ.1,034 கோடி ஊழல் நடந்துள்ளதாக வழக்கு உள்ளது.
இவ்வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியது. சோதனைக்குப் பிறகு நடந்த விசாரணையில் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார். அவரது காவல் நேற்று முடிந்ததையடுத்து, மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு வர்ஷாவுக்கு நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. வர்ஷா எந்த தேதியில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பாக அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.