சீதாவாக நடிக்க மிருணாள் தாக்கூரே தகுதியானவர்: துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் நடித்துள்ள ‛சீதா ராமம்' படம் இன்று வெளியாகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கி உள்ளார், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர். இதையொட்டி துல்கர் சல்மான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சீதா ராமம் ஒரு அசலான கதை. உண்மை கதையில் இது போன்ற கிளாசிக்கலாக அமைவது அரிது. இப்படி ஒரு கதை உலகில் எங்கும் இதற்கு முன் வரவில்லை. திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். ஒரு உன்னதமான நாவலை படிக்கும் போது சில கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.
'சீதா ராமம்' படத்தின் கதையைக் கேட்டதும் சீதையின் வேடத்தை கற்பனை செய்து பார்த்தேன். மிருணாள் தாகூர் இந்த பாத்திரத்தில் வந்தபோது மிகச்சிறந்த தேர்வாக தோன்றியது. படப்பிடிப்பு தளத்தில் மிருணாளை பார்த்தபோது அவரைத் தவிர வேறு யாராலும் சீதையாக நடித்திருக்க இயலாது என்பதை உணர்ந்தேன்.
இந்தப் படத்தில் புதிய ரஷ்மிகாவை பார்ப்பீர்கள். அவர் இதற்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. 'சீதா ராமம்' படத்தின் கதையை நகர்த்தி செல்லும் அற்புதமான ஆற்றல் ராஷ்மிகா கதாபாத்திரத்திடம் உள்ளது. நாளுக்கு நாள் எனக்கும் வயதாகிறது. வித்தியாசமான முதிர்ந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். புதிய கதாபாத்திரங்களிலும், நிஜமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காதல் கதைகளுக்கு சற்று ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன் என்றார்.