'ஜனநாயகம் செத்து கொண்டிருக்கிறது' – பாஜகவை தெறிக்க விட்ட ராகுல்!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

கையில் கருப்பு பட்டை அணிந்து, டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை உள்ளது; ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒவ்வொரு கல்லாக கட்டமைக்கப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே அடித்து நொறுக்கப்படுகிறது. சர்வாதிகாரமான இந்த ஆட்சிக்கு எதிராக நிற்பவர்களை கொடூரமாக தாக்குகின்றனர். கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

இந்தியாவில் இருக்க கூடிய 2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா?. அத்தனை சுதந்திரமான அமைப்புகளும் மத்திய அரசு, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. மக்களின் பிரச்னைகளான இது குறித்து பேசக்கூடாது என மத்திய அரசு கூறுகிறது. நாட்டில் நடக்கும் பிரச்னைகள், மக்கள் துயர் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு தெரியவில்லை.

நீங்கள் விரும்பும் அனைத்தையும் கேள்வி கேளுங்கள். ஆர்.எஸ்.எஸ்.,ஸின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை, அதைச் செய்யப் போகிறேன். நான் எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன்; நான் கடுமையாகத் தாக்கப்படுவேன். உண்மையை சொன்னால் தாக்கப்படுவேன் எனில், உண்மையை சொல்வதை நிறுத்த மாட்டேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; என்னை தாக்குங்கள். போரில் காயம் ஏற்படும் போது எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோல் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக மூத்தத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

நாட்டில் பொருளாதரம் பாதிப்பு, பணவீக்கம், ஜிஎஸ்டி, வேலை வாய்ப்பு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய் சொல்கிறார். நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டது என்கிறார். அவரது காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா.? அவரது குடும்ப நலனே அவருக்கு முக்கியம். குடும்பத்தினரை காப்பாற்ற ராகுல் காந்தி துடிக்கிறார். ஊழலால் காங்கிரஸ் வளர்ந்துள்ளது.

ராகுல் காந்தி ஜாமினை நாடுவது ஏன் ? காங்கிரஸ் கூறுவதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். சர்வாதிகாரம் குறித்து பேசுகிறார். இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது ஏன் ? இதனை அவர் மறந்து விட்டாரா ? பார்லிமென்டில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகிறார். அவர் தான் பார்லிமென்டில் விவாதம் நடத்த வராமல் அஞ்சுகிறார்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.