ஜனநாயகம் மரணிப்பதை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியனவற்றை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதுபோல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களை நடுரோட்டில் வைத்து கைது செய்கிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு ஏதோ 4, 5 பேரின் நலனைக் காப்பதில் மட்டுமே அக்கறையுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு செங்கல்லாக நாங்கள் உருவாக்கி கட்டமைத்துள்ளோம். ஆனால் ஐந்தே ஆண்டுகளில் அத்தனையையும் சிதைத்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் ஒரே கொள்கை மக்கள் பிரச்சினைகளை புறக்கணிக்க வேண்டும் என்பது மட்டுமே. ஜனநாயகம் மரணிப்பதை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது.
அரசுக்கு எதிராக யாராவது குரல் உயர்த்தினால் அவர்கள் மீது அப்பட்டமாகவே தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வாய்ப்பில்லை. இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. இங்கே 4 பேர் இருந்து கொண்டு சர்வாதிகாரம் செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.