புதுடெல்லி: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் தொடர்பிருப்பதாக பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங் கேற்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசவும் மம்தா திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி கூறும்போது, “கடந்த ஆண்டு காணொலி வாயிலாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா புறக்கணித்தார். இந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அவரே டெல்லி செல்கிறார். ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க பிரதமர் மோடியிடம் முறையிடவே மம்தா டெல்லி சென்றுள்ளார்” என்று தெரிவித்தார்.