நம் நாட்டில் ஸ்டார்ட் அப் என்றாலே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உடனே ஞாபகம் வருவது ஃபிளிப்கார்ட்தான். ஆனால், ஃபிளிப்கார்ட் தொடங்கப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அதாவது, 2000-ம் ஆண்டு அக்டோபரிலேயே ‘மேக்மை ட்ரிப்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுப்பதற்கு நாம் பழகி இருக்கிறோம். ஆனால், அப்போது மிகச் சிலர் மட்டுமே செய்யும் விஷயமாக இருந்தது அது.
ஆனால், இதற்கு மிகப் பெரிய வரவேற்பு எதிர்காலத்தில் உருவாகும் என்கிற நம்பிக்கையில் உருவானதுதான் ‘மேக் மைக் ட்ரிப்’ நிறுவனம். இந்த நிறுவனம் எப்படி உருவானது, சந்தித்த சிக்கல்கள் என்ன, அதிலிருந்து திருப்புமுனையாக எப்படி மீண்டுவந்தது என்பது குறித்து இந்த வாரம் பார்ப்போம்.
தீப் கர்லா என்பவர்தான் ‘மேக் மைக் ட்ரிப்’ நிறுவனத்தை உருவாக்கினார். இந்தியாவில் பெரும்பாலான தலைமைச் செயல் அதிகாரிகள் பயின்ற ஐ.ஐ.எம் அகமதாபாத்தில்தான் இவரும் படித்தார். படித்து முடித்தபின் ஏ.பி.எம் ஆம்ரோ நிறுவனத்தில் வேலை. வங்கிப்பணியில் ஒரே மாதிரியான வேலை அவருக்கு சலிப்பைத் தந்து. எனவே, அந்த வேலையை அவரால் தொடர முடியவில்லை.
வேறு வேலைக்கு முயற்சி செய்யும்போது, பெப்சிகோ, அர்விந்த் குரூப் ஆகிய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வந்தது. ஆனால், புதிதாக எதாவது செய்யலாம் என யோசித்த தீப் கர்லா, ஏ.எம்.எப் பவுலிங் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் சேர்ந்தார். மால்களில் பவுலிங் லேன்கள் இருக்கும். அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம். இந்தப் பிரிவை நம் நாட்டில் வளர்க்கலாம் என இணைந்தார். ஆனால், ரியல் எஸ்டேட், அரசு அனுமதி உள்ளிட்ட பல காரணங்களால் நான்கு ஆண்டுகள் பணியில் இருந்தாலும் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை.
இவருடன் படித்தவர்கள் பெரிய வேலையில் சேர்ந்துவிட்டார்கள். இவர் மட்டும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தார். அடுத்து ஜி.இ கேப்பிடல் நிறுவனத்தில் இணைந்தார். அப்போது இணையம் பிரபலமாகி வந்த நேரம். டாட் காம் நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்துவந்தது. அதனால் இணையதளம் தொடர்பான ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது நல்லது என்று முடிவெடுத்தார் கர்லா.
எங்கெல்லாம் போன் மூலம் ஒரு வேலை செய்கிறோமோ, அந்த இடத்தை எல்லாம் இணையம் நிரப்பும் என்பதுதான் ஐடியா. ஸ்டாக் புரோக்கிங் அல்லது ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுவந்த காலம் அது.
2000-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜி.இ. கேப்பிட்டல் நிறுவன வேலையை விட்டார் கர்லா. இ-வென்ச்சர்ஸ் என்னும் முதலீட்டு நிறுவனத்தின் அதிகாரியுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அவரிடம் தனது பிசினஸ் பிளானை விளக்கினார். தீப் கர்லாவின் ஐடியா அவருக்குப் பிடித்துப் போனது. 2 மில்லியன் டாலர் முதலீடு கொடுத்தார் அவர். முதல் கட்டமாக ஒரு மில்லியன் டாலரும், நிர்ணயம் செயய்ப்பட்ட இலக்கை அடைந்தவுடன் அடுத்த ஒரு மில்லியன் டாலர் முதலீடு வழங்கப்படும் என அவர் சொன்னார்.
பிசினஸ் பிளானும் ஒகே. முதலீடும் கிடைத்தாகிவிட்டாது. இனி ஜமாய்க்கலாம் என்று நினைத்தபோதுதான், சிக்கல் உருவானது.
2000-ம் ஆண்டு அக்டோப்ரில் ‘மேக்மை ட்ரிப்’ தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் என்னென்ன வசதி கிடைக்கிறது என்பது பற்றி நம் மக்கள் வந்து விசாரித்தார்கள். விசாரித்து விட்டு தங்களுக்குத் தேவையான இடத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டார்கள். எனவே, பிசினஸ் மாடலைக் கொஞ்சம் மாற்றினார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வருவதற்கும், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்குமேன சேவையை மட்டுமே கொடுக்கத் தொடங்கினார்கள். இப்படி அடுத்தகட்ட இலக்கை அடைந்தபோது, அடுத்த கட்ட நிதி கிடைக்கும் என கர்லா எதிர்பார்த்தார். ஆனால், ஏற்கெனவே செய்துள்ள முதலீட்டை விலக்கிகொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டது.
தொழில் வளர்ந்துவரும் இந்தச் சூழலில், இது பெரிய இடியாக இருந்தது. முதலீட்டாளர் வெளியேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். தவிர, தொழிலையும் நடத்தவேண்டும். வீடு வாங்குவதற்காக வைத்திருந்த தொகை, நண்பர்களின் முதலீடு என ஒரு வழியாக முதலீட்டாளர்களுக்கு வெளியேறும் வாய்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், அடுத்த இரு மாதங்களுக்கு மட்டுமே பணம் இருக்கிறது. ‘`நாம் மிகவும் கடினமாக காலகட்டத்தில் இருக்கிறோம். குறைந்த சம்பளத்தில் இருப்பவர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது. ஆனால், அதிக சம்பளத்தில் இருப்பவர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்கும்’’ என அறிவித்தார். அடுத்த இரு நாள்களில் பணியாளர்களின் எண்ணிக்கை 42-ல் இருந்து 24-ஆக சரிந்தது.
இது ஒரு சிக்கல் எனில், இதே காலகட்டத்தில் 2001 -ல் அமெரிக்க தாக்குதல், சார்ஸ், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் எனப் பல விஷயங்களும் அடுத்தடுத்து நடந்ததால் டிராவல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. 2001 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகள் நிறுவனத்துக்குக் கடுமையான சவாலாக இருந்தது.
ஓரளவுக்கு வருமானம் வந்துகொண்டிருந்தது. இந்த சமயத்தில் சில ஏஞ்சல் முதலீட்டாளர்கள் கணிசமான தொகையை முதலீடு செய்தனர். ஏற்கெனவே முதலீட்டாளர்களால் கசப்பான அனுபவம் இருந்தது என்றாலும், முதலீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்திருந்தார் தீப் கர்லா.
இந்த சமயத்தில்தான் இந்தியாவில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் வரத்தொடங்கின. ஐ.ஆர்.சி.டிசி. வந்தது. பிஎஸ்.என்.எல் டேட்டா இந்தியா முழுவதும் செயல்பட தொடங்கியது என்பதால், வெளிநாடுகளில் மட்டுமல்லாமல், உள்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும் எனில், முதலீடு தேவை என்பதை தீப் கர்லா நன்கு உணர்ந்திருந்தார்.
இந்த நிலையில், முதலீட்டைத் திரட்டி 2005-ம் ஆண்டு இந்தியாவில் செயல்படத் தொடங்கியது ‘மேக் மைட்ரிப்’. விமான டிக்கெட்டுகள், ஓட்டல்கள், ஹாலிடே பேக்கேஜ்கள் என வேகமாக செயல்படத் தொடங்கியது.
உலகத்தில் எங்கு பிரச்னை நடந்ததாலும் முதலில் பாதிக்கப்படுவது போக்குவரத்துத் துறைதான். 2008-ம் ஆண்டு சர்வதேச மந்தநிலை, கிங்பிஷர் விமானம் மூடப்படுவது, ஜெட் ஏர்வெஸ் சிக்கல், கோவிட் என எந்த ஒரு சிக்கல் இருந்தாலும் முதலில் போக்குவரத்துதான் நிற்கும்.
ஆனால், இதுபோன்ற பல பல சிக்கல்களைக் கடந்ததும் 22 ஆண்டுகளாக ‘மேக்மை ட்ரிப்’ செயல்பட்டு வருகிறது. ஆனால், இதன் வடிவம்தான் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த நிறுவனம் பல வெளிநாடுகளில் செயல்படத் தொடங்கியது, சில வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தியது.
2005-ம் ஆண்டு முதலீட்டாளர்களிடம் நிதி வாங்கியபிறகு, 2010-ம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தையில் ‘மேமைட்ரிப்’ பட்டியலிடப்பட்டது. தற்போது நிதி திரட்டுவது ஐ.பி.ஓ கொண்டுவருவது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கலாம். ஆனால், 12 ஆண்டுகளுக்குமுன்பே மேக் மை ட்ரிப் பட்டியலானது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறையில் பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவானது. புதிய முதலீடுகளும் கிடைத்ததால், பெரிய அளவுக்குத் தள்ளுபடி போர் நடந்தது. அதனால் ஒரே துறையில் இருந்துகொண்டு தள்ளுபடி கொடுத்துக் கொண்டிருப்பதைவிட இணைந்து செயல்படுவதே சிறந்தது என்பதால், ஐ,பி,ஐ,பி,ஒ குழுமத்துடன் ‘மேக் மை ட்ரிப்’ இணைந்தது. 2016-ஆம் ஆண்டு இந்த இணைப்பு முடிந்தது.
டெக்னாலஜியைப் பொறுத்தவரை, சீக்கிரமாக தொழில் (ahead of the market) தொடங்கி காணாமல்போன நிறுவனங்கள் பல உள்ளன. ஆனால், இணையம் வரும்போதே தொடங்கி வெற்றி அடைந்த சில நிறுவனங்களுள் ‘மேக் மை டிரிப்’பும் ஒன்று.