திமுகவின் சாதனைகளை கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்குவோம் – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுகவின் வெற்றி, ஆட்சியின் சாதனைகளை பேரணியாக சென்றுகருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு அவரது நினைவு நாளில் அமைய உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் நேற்று எழுதியகடிதத்தில் கூறியிருப்பதாவது:

அமைதிப் பேரணி

இயக்கத்தை வழிநடத்தவும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்தவும் பேராற்றலாக விளங்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆக. 7-ம் தேதி 4-ம் ஆண்டு நினைவு தினம். ஒவ்வொரு நொடியும் அவர் நம் நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார். நமது ஆட்சியின் மகத்தான இயங்கு சக்தியாக விளங்குகிறார். அண்ணா மறைவுக்குப்பின், ஆண்டுதோறும் அவரது நினைவு நாளான பிப்.3-ம் தேதி தொண்டர்கள் பங்கேற்புடன், அமைதிப் பேரணியை வழிநடத்திச் செல்வது கருணாநிதியின் வழக்கம். அரை நூற்றாண்டு காலம் இதை அவர் கடைபிடித்தார்.

அண்ணா வழியில் பயணித்த கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், அவரது முதலாண்டு நினைவு தினத்தில் என் தலைமையில் அமைதிப் பேரணி நடந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் கரோனா காரணமாக அமைதிப் பேரணி நடத்த வாய்ப்பில்லாமல் போனது.

தேர்தல் களத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றி, மக்களின் அன்புடனும் ஆதரவுடனும் திமுகவை ஆட்சியில் அமர வைத்துள்ளோம்.

இந்தியாவுக்கே முன்னோடி மாநிலம்

10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழகத்தை விடியச் செய்து, பல்வேறு துறைகளிலும் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர வைத்துள்ளோம். அத்தகைய வெற்றியையும் சாதனைகளையும் பேரணியாகச் சென்று கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு அவரது நினைவு நாளில் அமைய உள்ளது.

திமுக சார்பில் அண்ணா அறிவாலய வாயிலில் அண்ணா சிலைக்கு அருகில் கருணாநிதி சிலையை அமைத்தோம். தமிழக அரசின் சார்பில் சென்னையின் இதயப் பகுதியில் உயிர்ப்புமிக்க சிலையை அமைத்திருக்கிறோம்.

ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள இந்த சிலையில் இருந்து தொடங்கி, கருணாநிதி ஓய்வெடுக்கும் நினைவிடம் வரை ஆக. 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. என் தலைமையில் நடக்கும் பேரணியில், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட திமுக முன்னணியினரும், தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க இருப்பதை சென்னை மாவட்டச் செயலாளர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

தலைநகர் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் கருணாநிதியின் உயிரோட்டமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஊர்களில் கருணாநிதி சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்தலாம். இனிமேல் சிலை அமைய உள்ள ஊர்களில், திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் வணக்கம் செலுத்தலாம்.

புகழை மறைக்க முடியாது

ஆட்சியின் மாட்சிக்கு சாட்சியம் கூறும் வகையில் தொண்டர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழினத்தின் எதிரிகளும், அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விலைபோகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கருணாநிதியின் புகழை சிறிதும் மறைக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.